Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

இசைக்குள் அடங்காத பாடல்கள்

முல்லை அமுதன்

தேசிய கலை இலக்கியப் பேரவை

++++++++++++++++++++++++++++

தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு - 96

நூற்பெயர் : இசைக்குள் அடங்காத பாடல்கள்

ஆசிரியர் : முல்லை அமுதன்

பதிப்பு : செப்டம்பர், 2002

வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை

அச்சிட்டோர் : கௌரி அச்சகம்

முகப்பு ஓவியம் : இரா. சடகோபன்

விநியோகம் : சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிடட்,

44, மூன்றாம் மாடி,

கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,

கொழும்பு -11.

தொலைபேசி : 335844.

வசந்தம் புத்தக நிலையம்

405, ஸ்ரான்லி வீதி,

யாழ்ப்பாணம்.

விலை: ரூபா. 100/=

Title : Issaikkul Adangatha Paddalkal

Author : Mullai Amuthan

Edition : September, 2002

Publishers : Dheshiya Kalai Ilakkiyap Peravai

Printers : Gowry Printers

Cover Design : R. Shadagopan

Distributors : South Asian Books,

Vasantham (Pvt) Ltd,

No. 44, 3rd Floor,

C.C.S.M. Complex,

Colombo -11.

Tel : 335844.

Vasantham Book House,

405, Stanly Road,

Jaffna.

ISBN No : 955-8637-13-0

Price: Rs. 100/=

++++++++++++++++++++++++++++

சமர்ப்பணம்

இப்பூவுலகில் மனிதனாய்

கவிஞனாய் சஞ்சாரம் செய்ய

அருளிய-

என் தந்தை இரத்தினசபாபதி

அவர்கட்கு...

++++++++++++++++++++++++++

நன்றிகள்

- ஈழமுரசு பாரிஸ்

- ஈழநாடு பாரிஸ்

- இலக்கு இந்தியா

- யுகம் மாறும் லண்டன்

- பொதிகை இந்தியா

- நவமணி கொழும்பு

- அச்சகத் தோழர்கள்

- பதிப்பகத்தார்

- இன்னும் முகம் தெரியாத பலருக்கு

+++++++++++++++++++++

பதிப்புரை

தேசிய கலை இலக்கியப் பேரவையின் சார்பில் கவிதை நு}ல் வெளியீட்டு வரிசையில் 1986-ல் மூத்த கவிஞர் இ.முருகயைன் அவர்களுடைய ‘அது அவர்கள்’ என்ற கவிதை நு}லை முதலாவதாக வெளியிட்டோம்.

கவிதை நு}ல் வெளியீட்டில் கவிஞர்கள் முருகையன் முதல் சி.சிவசேகரம், சுல்பிகா, சோலைக்கிளி, பற்குணம், இளவாலை விஜயேந்திரன், பசுபதி, சோ.பத்மநாதன், இராகலை பன்னீர், அழ.பகீரதன், மாவை வரோதயன், சோ.தேவராஜா, க.தணிகாசலம், பவித்திரன் வரையானோரின் கவிதை நு}ல்களும் சில்லையூர் செல்வராஜனின் ‘பாரதி கவிதைச் சமர்’ எனும் தொகுப்பை கமலினி செல்வராஜனும் ‘கவிஞர் சுபத்திரனின் கவிதைகள்’ தொகுப்பை சி.மௌனகுருவும் ‘மஹாகவியின் ஆறு காவியங்கள்’ தொகுப்பை எம்.ஏ.நுஃமான் ஆகியோரும் தொகுத்து இதுவரை எல்லாமாக 27நு}ல்கள் வெளியிட்டுள்ளோம்.

முல்லை அமுதனின் ‘இசைக்குள் அடங்காத பாடல்கள்’ என்ற இக்கவிதை நு}ல் எமது 28வது கவிதை நு}லாகவும் நு}ல் வெளியீட்டில் 96வது நு}லாகவும் வெளி வருகிறது. இந்நு}ல் ஏற்கனவே 1995ல் வெளிவந்திருக்க வேண்டியதாகும்.

இலண்டனில் இருந்து தொடர்ந்து இலக்கியப் பணிபுரிந்து வரும் முல்லை அமுதனின் முயற்சிக்கு ஈடுகொடுத்து இந்நு}லை வெளியிடுவதில் மகிழ்வுறுகிறோம்.

புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் புகலிடச் சிக்கலுக்குள் முகம் சிதைந்து போகாமல் மானுட நேசிப்புடன் தம் எழுத்துப் பணியைத் தொடர்வதன் மூலம் பரந்து வாழும் தமிழ்ச் சமூகத்தின் பன்மைத் தன்மையினை பரிமாற்றிக் கொள்வதனு}டு பல்லினப் பண்பாட்டின் விருத்திக்கு ‘நம்மாலியன்ற பணிகளை ஆற்றிடுவோம். சும்மா இரோம்’.

கவிதைகளைப் படிப்போம். கலந்துரையாடுவோம். விவாதிப்போம். விமர்சிப்போம். நடிப்போம். அபிநயிப்போம். நிகழ்த்துவோம். அரங்காக்குவோம். ‘நமக்குத் தொழில் கவிதை’ என முழங்கிடுவோம்.

அட்டைப்படம் வரைந்த கவிஞரும் ஓவியரும் பத்திரிகையாளரும் சட்டத்தரணியுமான இரா. சடகோபன் அவர்களுக்கும் கணனி வடிவமைத்த சோபனாஇ சிந்தியா ஆகியோருக்கும்இ இந்நு}லை அச்சிட்டு வழங்கிய கௌரி அச்சகத்தினருக்கும்இ திரு. எஸ். இராஜரட்ணம் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

கவிதை விமர்சனங்களை வரவேற்கிறோம்.

தேசியகலை இலக்கியப் பேரவை

இல. 44இ 3-ம் மாடி,

கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி

கொழும்பு - 11

தொலைபேசி : 335844.

++++++++++++++++++++++++++++

என்னுரை

வாழ்தலின் அர்த்தம் தெளிவுற வேண்டும். வாளைக் கொடுத்தால் கிழித்துப் போட்டிருப்பான் ஒருவன். என்னிடம் எழுது என பேனா தரப்பட்டது. உங்களிடம் இந்நு}ல் சமர்ப்பணமாகிறது. 1995ல் வெளிவந்திருக்க வேண்டும்... தமிழ்நாட்டுப் பதிப்பகங்களிலும் அச்சிட எனத் து}ங்கியது. இப்போது நு}லாக வருவது காலத்தின் கனிவு என்பேன்.

இப்போதும்,

வாழ்தலின் அர்த்தம் தெளிவுற வைத்தது. விமர்சனம் வேண்டி இந்த இலை போடப்பட்டுள்ளது, பல்சுவைக் கூட்டுடன். விமர்சனம் தாருங்கள். அடுத்து நாவலில் சந்திப்போம்.

நன்றி.

இவன்,

முல்லை அமுதன்.

25.05.2002.

++++++++++++++++++++++++++++++++

முல்லை அமுதனின் கவிதை உலகம்

புனைகதையாளராக நன்கறியப்பட்ட முல்லை அமுதனின் கவிதைகள் சில இன்னொரு தொகுப்பாக வெளிவருகின்றன. இவை எழுதப்பட்ட கால இடைவெளி பெரும்பாலும் சென்ற நு}ற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகள் என்றே தெரிகிறது. 1985ல் எழுதிய ஒரு கவிதையும் உள்ளது. முல்லை அமுதனின் கவிதை உலகம் தேசிய இன ஒடுக்குமுறை உக்கிரமடைந்து இன ஒழிப்புப் போராக விருத்தி பெற்ற காலத்தின் நினைவுகளையும் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பற்றிய நம்பிக்கைகளையும் கொண்டது. ஒரு சில அகப் பண்பான கவிதைகள் உள்ளன எனினும் போரின் கொடுமைகளினதும் சமுதாயத்தின் அவல நிலையினதும் நிழல்கள் அவற்றின் மீதும் சாய்கின்றன.

புலம்பெயர்ந்த சூழலிலேயே இக்கவிதைகளில் அனேகமாக யாவுமே எழுதப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டம் பற்றிய விமர்சனமற்ற நம்பிக்கையைக் கவிதைகள் அடையாளங் காட்டினாலும், மூர்க்கத்தனமான தேசியவாதமும் பேரினவாதத்துக்கு எவ்வகையிலும் குறைவில்லாத இனத்துவேஷமும் கொண்ட தமிழ்த் தேசியவாதக் கவிஞர்களின் ஆக்கங்களினின்றும் இவை வேறுபடுகின்றன. மறுபுறம், மிகத் தீவிரமான தேசிய விடுதலை உணர்வுடன் எழுதத் தலைப்பட்டு, இன்று விடுதலைப் போராட்டமே வேண்டாம் என்று சொல்கிற நிலையில் உள்ள கவிஞர்களின் நோக்கில் முல்லை அமுதனின் நிதானம் அவரை விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவே காட்டலாம்.

என்னளவில், முல்லை அமுதன், பேரினவாத இன ஒடுக்கலும் அதற்கு எதிரான போராட்டமும் என்ற வரையறைக்கு வெளியே உள்ள எந்தப் பரிமாணத்;தையும் கணிப்பிற் கொள்வதைத் தவிர்க்கிறார் என்றே தோன்றுகிறது. இன்று எல்லா விடுதலைப் போராட்டங்களுக்கும், அவை அமெரிக்க ஏகாதிபத்திய நலன் சார்ந்து அமையாத வரையில், பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு விடுதலைப் போராட்டத்தின் போக்குப் பற்றிய விமர்சனம் ஒடுக்குமுறையாளர்களால் பயன்படுத்தப்படலாம் என்பது நியாயமான ஒரு அச்சமாக இருக்கலாம். ஆயினும் இவ்வாறான அச்சங்களின் விளைவாகத் தவறான போக்குகள் தட்டிக் கேட்பாரின்றித் தொடருகின்றன என்பதையும் நாம் மறக்கலாகாது.

தமிழ்த் தேசியவாதம் தனது விடுதலை என்ற இலக்கிற்கு வெளியே அதன் சில செயற்பாடுகள் பற்றி யாரும் அசட்டையாக இருக்க முடியுமா?

விடுதலை என்பது அறஞ் சார்ந்த ஒரு பிரச்சனையுமாகும். அது யாருடைய அறம் எத்தகைய அறம் என்பன பற்றிய கேள்விகள் எப்போதுமே உள்ளன. ஒரு படைப்பாளியின் அறப் பார்வை அவரது வர்க்கக் கண்ணோட்டம் சமூக நீதி பற்றிய உலக நோக்கு என்பனவற்றால் தீர்மானமாவது. முல்லை அமுதன் ஆண்ட பரம்பரைக் கவிஞர் அல்ல. அவரது தமிழ்த் தேசியம் பழம்பெருமையும் வரலாற்றுப் புனைவுகளும் சார்ந்தது அல்ல. சமூக அநீதிகள் பற்றிய மனக் குமுறல் “மௌனமாகி நின்றாய்” கவிதையில் பெண்ணின் உரிமைக் குரலாக எழுகிறது. “மூன்று கவிதைகளில்” முதலாளியச் சுரண்டல் பற்றிய கோபம் சற்று புலனாகிறது. இதற்கப்பால் அவரது கவிதைகள் தமிழ்ச் சமூகத்தினுள் வேரோடிக் கிடக்கிற கொடுமைகள் பற்றியோ அவற்றுக்கு எதிரான எழுச்சிகளைப் பற்றியோ போராட வேண்டிய தேவை பற்றியோ எதுவுமே பேசவில்லை. இது தமிழ்த் தேசியக் கவிதைகளின் பொதுவான குறைபாடுகளில் ஒன்றுதான். இடதுசாரி இயக்கத்துடனும் அதன் காத்திரமான சமூக விடுதலைப் போராட்டங்களிலும் பங்கு பற்றிய, ஆதரவு வழங்கிய, அவை பற்றி ஆழச் சிந்தித்த படைப்பாளிகளன்றி யாருமே தமிழ்ச சமூகத்தின் பாரிய அகமுரண்பாடுகள் பற்றி ஏதாவது எழதியிருந்தால் அது இடதுசாரி இயக்கத்துடனான சொற்ப பரிச்சயத்தினாலேயே என்று பெருமளவு உறுதியுடன் கூற முடியும்.

ஈழத்தவரது தமிழ்க் கவிதைகளை அவற்றின் உள்ளடக்கத்திற்கும் மேலாக வேறுபடுத்திக் காட்டக் கூடியது அதன் மொழிநடை. ஆயினும் கவிஞர்கள் நடுவே இன்னமும் தமிழகத்தின் சில மயக்கமான கவிதைப் போக்குகளைப் பற்றிய மயக்கங்கள் உள்ளன. முல்லை அமுதனிடம் அவ்வாறான போக்கு இல்லாவிடினும், அவரது சொற் தெரிவில் அவரது மண்ணின் மொழி நடைக்கு உடன்பாடற்ற பண்புகளைக் காண முடிவது அவரது மொழிநடைக்கு அதிகம் உதவுவதல்ல. பிரசவித்தல், காரணகர்த்தா, ஜெயிக்கும், கௌரவம், சூன்ய வெளிகள் போன்ற சொற்கள் அவரது கவிதை வரிகளில் வரும் பிற சொற்களுடன் ஒட்டாமல் துருத்திக் கொண்டு நிற்பது, அவை அவரது கவிதையின் அன்றாடப் பேச்சு மொழிநடைக்கு உரியனவல்ல என்பதாலேயே என நினைக்கிறேன். அதைவிட, வாழாவெட்டி, கற்பிழத்தல் போன்ற தகாத சொற்பிரயோகங்கள் பற்றியும் அவர் எச்சரிக்கையாக இருப்பது நல்லதென்றே நினைக்கிறேன்.

முல்லை அமுதனின் மனதில் உள்ள சமூக நீதிக்கான உணர்வு தேசிய விடுதலைப் போராட்டத்தின் பிரதான முரண்பாட்டுக்கு வெளியிலும் கவிதைத் தளத்தில் தேடலை நடத்த வேண்டும் என்பதே என் அன்பான ஆவல். காதலும் வீரமும் என்ற எல்லையைக் கடந்து அவரது கவிதை உலகம் மேலும் உலகு தழுவி விரிவடைய வேண்டுகிறேன்.

சி. சிவசேகரம்

பேராதனை

05-09-2002.

+++++++++++++++++++++

1

பதில்

கருப்பையும்-

மலர்களைப் பிரசவிக்கும்

பின்னாளில்-

எங்கள் நெஞ்சில்

விழுந்த அந்தத் திரைமலர்!

ஈழத்து மண்ணிற்காக...

பூத்த

ஒரு தமிழ்மலர் கூடத்தான்

இல்லையெனில்...

உடைந்த இதயத்திற்கு

அருள்மொழி

தந்தவனே நீயல்லவா...!

தமிழ் மணந்து

சாக வேண்டும் மனிதன்...

நீ ஒரு படிமேலே...

தமிழ் நாட்டில்

தண்ணீர் தட்டுப்பாடாமே

இதோ... இதோ

எங்களின் கண்ணீர்

சேமியுங்கள்...

பலரும்-

உன்னால் வளர்ந்தார்கள்

உன்னால்...

நாடும் வளர்ந்தது

யார்தான் இங்கு மறுப்பார்கள்?

உன்னை

வணங்கியாவது

சிலர்-

வாழப் பழகிக் கொண்டார்கள்

கூடவே

கட்சியுடன் வாழப் பழகிக் கொண்டார்கள்

நீ ஒரு முல்லைமலர்

சத்தியப்பூ பிரசவித்தது

ஒரு முல்லைமலரா?

கூப்பிடுங்கள்...

எங்கள் மன்னவனை

தமிழ் மலராக்கியவனை...

மாலையிட்டுக் கொள்கிறேன்.

ஈழம் என்று

எங்கள் தோழர்கள்

முரசறைந்த போது கூட

தோள் கொடுக்க

உன்னாலும் முடிந்ததே...

பார் உனது வழி வந்தவர்கள்!

துயில் கொள்ளும்

முன்னவனை து}ங்க விடுங்கள்

உங்கள்

சில்லறைச் சண்டைகளுக்கு

‘விலக்குப் பிடிக்க|

அவரை எழுப்பி விடாதீர்கள்.

முடிந்தால்

அவர் போல் வாழப் பாருங்கள்

இல்லையெனில்

கட்டிக் கொள்ளுங்கள் மூட்டை முடிச்சுக்களை

அதுவும் இல்லையெனில்...

நாளை வரும்

இளைய சந்ததியினரின்

துப்பாக்கிகளுக்கு

பதில் சொல்லியாக வேண்டும்.

13.10.1991

++++++++++

2

நெருப்பு வரிகள்

நண்பனே

ரவைகள் கூட மாத்திரைகளோ?

நீள் துயில் கொள்

து}க்க மாத்திரைகளோ?

புரட்சிக்கனிகள் என்னில் பூக்கலாம்

என்றுதான்-

உன்னைச் சந்தியில் பிணமாய்த் தின்றார்களோ?

தொலைந்து போன-

சூரியனின் உதயத்தை

கைகளால் இழுத்து

கொண்டுவர

புறப்பட்ட எங்கள் தோழனே

ஏன்-

ரவைகளின் வெளிச்சங்களுக்குப் பலியாகிப் போனாய்?

கண்ணில்

நீர் செத்த

இந்த நாட்களில் நாம்

கண்ணீருடன் இரத்தமும் வடிக்கின்றோம்.

சோகங்களைச் சுருட்டிவிட்டு

புதிய பாதைகளை

போட்டுத்தந்த உன் கால்களில்

அடக்குமுறைக்கேன்

சில்லுகள் உதைத்தன...

உன் தலையில் எழுதியதை

இவர்கள்

இப்படி எழுதுவது

நியதிதான்

தோழனே...

உனது பிரகடனங்களே

எங்கள்

நெஞ்சின் நெருப்பு வரிகள்!

+++++++++++++++

3

ராஜ பறவைகளுக்கு

இருட்டு மனிதர்களை

சூரியன் முன்னே

விசாரணை நடத்துவதற்காய்

நோன்பு நோற்கின்ற

விரதிகளே-

உங்களிடம் மலர்களையே

கொண்டு வந்த-

எம்மிடம்-

‘நாங்கள் நேசிப்பது முட்களையே’

என்கிறீர்கள்.

ஓ... புரிகிறது

ராஜ பறவைகளே

முட்களாய் விதைக்கிறோம்

எங்களை-

ஆசீர்வாதம் செய்யுங்கள்.

++++++++++++++++++++

4

சொந்த தேசத்து அகதிகள்

வானம் பெய்தது திராவகமாய்...

நம்பிக்கைகள்; கிழிந்தன

மீண்டும்

சொந்த தேசத்தில்

அகதிகள் ஆகினோம்.

நிலம், வீடு, உறவுகள்,

குழந்தைகள்,

மனைவி என...

திசைக் கொன்றாய் பிரிந்து...

மாரி மழை வருகை தர

நிலமெல்லாம்

பூத்தும், காய்த்தும்

அறுவடைக்குத் தயார்

என்றிருந்த வேளையில்...

ஒன்று,

இரண்டு

பிறகு தொடரும் ஷெல்களில்,

பொம்மைகளில்

மனித உடல்கள் சரிந்துவிழும்.

நிலம்

மழை நீருடன் சிவப்பாகும்.

சிவனே

யாருக்கு வேண்டும்

உன் ஊழித்தாண்டவம்?

நீயே அகதியாகிவிட்ட நிலையில்...

ஒரு முன்னேறிப்பாய்தலின்

பின்னும்

சிறிதான நம்பிக்கை...

இப்போது

சிறகுகள் முறிந்த நிலையில்

அப்பா -

நீ கற்றுத்தந்த

சாத்வீக தர்மம் பொய்த்தது.

பேரனின் வழிதான் சரி

நீ இழுத்த இரட்டைமாட்டு

வண்டியில்

அகதியாய் நானும் தொடர...

யார் யாருக்குச் சொந்தம்

இங்கு?

பேரனே

உயிர் ஒதுங்க வழிசொல்!

முத்தெடுக்கப் போய்

மூழ்கினவன் கதையாய் நான்!

சுண்டிவிடப்படும் நாணயம்

இந்தமுகம்

பார்த்து விழவேண்டும்

என்று விதி விதித்தவன் யார்?

வீழ்ந்தது!

ஏமாந்தோம்!!

நெஞ்சறுத்துப் போனவள் பெண்.

நண்பன் மறுத்தான்

பஞ்சு என்று தெரிந்தும்

தீ எடுத்து தருவதால்

இதயமல்லவா

தீப்பற்றுகிறது இங்கு!

மேலும், சொல்வேன்.

கல்லிலும் அடித்து,

காற்றிலும் மோதி,

'கொலையும் செய்வாள் பத்தினி"

09.01.1997

+++++++++++++++++++++

5

உயிர் வாழ

சொந்த நாட்டில்

அகதியாக

பதிவு செய்து கொண்டாயிற்று!

அடிக்கடி

சுற்றி வளைத்து

அடையாள அட்டை கேட்கப்படுகிறது.

சொந்த நாட்டில் வாழ்வதற்கு

உத்தரவாதமா அடையாள அட்டை?

வீதிக்கு வரும் போதும்,

தோள் கோர்த்துக்

காதலியுடன்-

சல்லாபிக்கும் போதும்

நடு இரவில்

மனைவியுடன் உறவு

கொள்ளும் போதும்

பத்திரப்படுத்த வேண்டியே உள்ளது

ஒரு அடையாளத்திற்காக...

ஷெல் விழும்; குண்டு தாக்கும்...

அடையாளம் காண கவனம் தேவை!

தொலைந்து விடாதே!

நண்பன் சொன்னான்.

'நண்பனே எனக்கு

உயிர் வாழ்வதற்கு

உத்தரவாதம் தா"

என்ற போது - ஒரு

கைக்குண்டைத்

தந்து சென்றான்!

+++++++++++++++++++++

6

தோழனுக்கு

கனவுகள்

உடைந்து போனதற்காய்

கவலைப்படும் நீ

ஒரு விட்டிலின் இறப்பிற்கு

காரண கர்த்தாவாகிவிடாதே!

வாழ்க்கையைத் தேடித்தான்

அவை வந்தன

சிறகுகளை

இழந்து நிற்கின்றன.

நட்சத்திரங்களின்

வழக்குகளை விசாரித்துவிடு!

பூமியின்

அழுகைக்கு காரணம் தேடு!!

ஒரு

குயிலின் பார்வைக்கு காத்திருந்தது போதும்,

நனைகின்ற

மயிலுக்காவது குடை பிடி!!

கிளைகள்

முறிந்ததாய்

கவலை கொள்கிறாயா?

தோழனே

வேர்களில் இன்னமும் ஈரமிருக்கிறது.

பிறகு பார்

சூரியன் உதிக்கும்

நள்ளிரவிலும்

உன் தேசத்திலும்

+++++++++++++++++++++

7

“மெனமாகி நின்றாய்...”

அப்படியென்ன

பலமான யோசனை?

மாமி மிரட்டினாளா?

கணவன்-

போ... போ என்று துரத்தினானா?

வாழ்நாளில் எல்லாம்

கவலைகளைச் சுமந்தபடி...

பால்ய நினைவுகளை

அறுத்தபடி...

விலகிச் செல்லும் மனிதர்களை

இயற்கைகளை

ஜன்னலு}டு பார்த்தபடி...

முட்டாள் கணவனின்

இழுப்புக்கு இணங்கிப் போனதுபற்றி...

முலை திமிரெடுத்து

வழிய வழிய பால் சுரப்பது

தெரியாமல்...

மௌனமாய்... நீ

காப்பகத்தில் விட்டுவந்த

குழந்தை பற்றி...

என்ன சிந்தனை?

எதுவாயினும்

உள்ளம் திறந்து

சொல்லிவிடு என்னிடம்

இந்த

வழிப்பயணம் முடிவதற்குள்!

ஜெயிக்குமோ?

எனக்குள் வியப்பு!

‘பெட்டக்கழுதையை

பட்டினி போடு’

தகப்பனும் உறும

தாய் நடுங்குவாள்.

“அவனைப் பார்க்காதே!

பேசாதே!!”

சட்டம் இயற்றினார்

ஐயரும் வந்தார்.

புதிதாய் நாளும் பார்த்தார்

தன் அக்காள் மகனுக்கு ...

“மருமகனால் சொத்தும் சேரும்

கௌரவம் தொடரும்”.

மனதுள் குது}கலித்தார்

மாறாக -

‘அவனே வேண்டும்’

அவள் அடம்பிடித்தாள்

அவளை சினத்துப்பார்த்தார்

‘உன் காதல் ஜெயிக்குமா’?

தந்தையின் எரிகண்களுக்கு

‘முடியும்’ என்று பதிலும் தந்தாள்.

வீட்டுக்காவலில் அவள்

எப்படி?

சினிமாக் காதலல்லவே.

ஒருநாள்...

அப்பன் கேட்டான்.

‘சாப்பிடாமல் பட்டினியில்

இருக்கிறாயே?’

மறுத்தாள்.

‘முற்றத்து அரளிவிதை அரைத்து

குடித்து

என்னை ஜெயிக்கலாம் என நினைக்கிறாயா?’

‘இல்லை...

காதல் ஜெயிக்கும்.

காதலன் கைப்பிடிப்பேன்

காதல் தோற்கின்,

அரளி விதை அரைத்து

உனக்கு

நான் குடிக்க தருவேன்’

தகப்பன் திகைத்து நிற்க

இருபதாம் நு}ற்றாண்டுப் பெண்

வீரமாய்

நடந்தாள்.

++++++++++++++++++

8

விதையும் விருட்சமும்

உன்

தாத்தா அசட்டையாய்

சாப்பிட்டு

எறிந்த விதைதான்...

விருட்சமாகி நிற்கிறது !

எப்போது நீ

என்னை விதைக்கப் போகிறாய்?

நாளை

உன் தோழனுக்கு

வரலாறு சொல்ல தேவைப்படலாம்!

05.06.1994

++++++++++++++

9

இருளில் இருந்து...!

ஏன் இந்தப் பெருமூச்சுக்கள்!

சுவருடன் மோதி

சிதிலமாகிப் போன உடலால்

மல்லாந்து கிடப்பான் ஒருவன்.

சாகவில்லையாயினும்

சாகவும் விடமாட்டீர்களே!

‘பஞ்சணை மெத்தை என் சிறைச்சாலை

வசதிகளை தீயிட்டுப் பொசுக்குங்கள்.’

மர்ம உறுப்புக்கள்

புண்ணாய் மாறிநிற்கும் சங்கதிக்கு

இவனோ...

இன்னும் மிளகாய்ச் சாக்கினுள்தான்

மனைவியின்-

நினைவில் கழிந்த இரவுகளை

இவர்களால்...

திசை திருப்பி விடும்போது-

அம்மா... அம்மா... என்று

சோகமாய்... அழுகையாய்...

எத்தனை நாட்களுக்கு இந்தக் கறுப்பு நாட்கள்?

இதயத்துள் எரிவது-

எரிமலை என எப்போதுணர்த்துவது?

உயர்ந்த அவர்களுக்கப்பால்

எழுந்து வருகின்ற சூரியனும்

ஒளிதரும்போது

இங்கு மட்டும் என்ன இருட்டு?

காவலர்களைச் சொன்னேன்... காக்கி உடையில்...

து}ரத்தில் ஒருத்தியின் மரண ஓலம்

கேட்கும் போது-

மனது துடிக்கும்

யாரோ ஒரு பெண்... மாணவியோ?

வீட்டில்-

அக்காளையோ தங்கையையோ

நினைக்க... மனது உலுக்கும்.

இரவும் பகலும் இப்படித்தான்

கைதிகள் என ஆனபின்-

இங்கு

எல்லாருமே சமமானவர்கள்தான்...

தண்டனையைச் சொல்கிறேன்.

‘தமிழ் வளர்க’ வானொலி கூற

காற்றில் பாடி வரும்... நெஞ்சம் குளிரும்

இங்கு மட்டும்-

தமிழ் பேசியதால் நாம்...

இருளில் இருந்து நாம் என்று வெளிவருவது?

எந்தக் கரங்கள்

சூரியனைச் சுமந்துவர தயாராய் இருக்கின்றன?

நாங்கள்... நாங்கள்...

மனது

சபதம் இந்த இரவில் எடுக்கும்

விடியும் போது?

+++++++++++++++++++++

10

பாலைவனத்தில் எனது கனவுகளுடன் நான்

வானம் இடித்ததாய் படித்ததுண்டு

பார்த்ததில்லை

கவலைகளைத்தான் சொல்கிறேன்

எங்கே வைத்த நம்பிக்கை கனவுகளை

நட்சத்திரத்திடம் தொலைத்துவிட்டேன்...

நட்சத்திரம் மின்னுகிறது நான் மட்டும்?

தேவர்களிடம் வரம் கேட்கும் போது

துணைக்கு வரும் நீ வரத்தை மட்டும்

உனக்காக்கிக் கொள்வதில் என்ன நியாயம்?

பிறந்த நாளில் நின்றுகொண்டு...

எதிர் காலச் சிரிப்பில் நீ...

எரியும் நெருப்பில் நின்றுகொண்டு

சூன்யவெளிகளை வெறித்தபடி நான்...

ஓ...

கனவுகளே து}ரப்போய் விடு

இனியாவது!

கால்களைத் து}க்கி வைக்க அனுமதித்து விடு!

சோகங்களை விலக்கி விடச்சொல்லி...

எந்தத் தலைவனிடம் கேட்பது...

எவரும் அவரவர் துணைகளுடன்...

இங்கு மட்டும் என்ன கொட்டியா கிடக்கிறது

நான் பொறுக்கிக் கொள்வதற்கு...

மீண்டும் ஒட்டகம் என்மீது நடக்கிறது.

23.01.1985

++++++++++++++++++

11

பொதுமைப் பூக்கள்

காலை அரும்பி

மாலை கருகும்

மலர்களல்ல...

அதிர்ச்சி வைத்தியத்தால்

சிதைந்துவிடும்

கண்ணாடி வார்ப்புகளுமல்ல...

பீரங்கி விந்துகளை

கருப்பைகள்

இங்கே சுமக்கும்... அதுவே

புரட்சி வித்துக்களை

பிரசவிக்கும்!

கோமகன் நாமம் உச்சரிக்கும்

கோபியர்களை விட

விடுதலைக் கவிதைகளை

உச்சரிக்கும் நாங்கள்

மேலானவர்கள்... புரட்சியை

வெல்லத்துடிப்பவர்கள்...!

வானமே கூரையாக

வையகமே எல்லையாக

அழகு நிலாவை

சாட்சி வைத்து

அரங்கேறுகின்ற எங்கள்

கல்யாணங்களால்

பொதுமைகளையே எங்கள்

கருப்பைகள் மலரவைக்கும்!

+++++++++++++++++++++++

12

பாதையோரத்துப் பயணிகள்!

எங்கள் கவிதைகளை

இந்த தெருவிளக்குச் சொல்லும்

இருண்ட வீதிகளின்

இலக்கியத்தை-

நடைபாதை மேடைகள்

காவியமாக்கும்

எல்லாமும் அவனே

என்று-

சிவனை முதலாக்கி

நம்பிக்கைத் தாலி கட்டி

இந்த-

பாதையோரத்துப் பயணிகளின்

வீதி வாழ்வு நீளும்...

சோக முத்திரைகள் நாங்கள்

அன்பை நேசிப்பவனுக்கு

நாங்கள்-

சோகச் சித்திரங்கள்... தேசியம்

உருவாக்கிய-

புதிய வார்ப்புக்கள்...

உங்களுக்கு...?

மழையில் குளிப்போம்!

வெயிலில்

உடல் காய்வோம்!!

வானத்தைக் கூரையாக்கி

வீதியை-

கட்டிலாக்கி... வாழ்வின்

அத்தியாயங்களை

நாள்தோறும் புரட்டிடுவோம்!

+++++++++++++++++++++++

13

ஒரு மலரின் காத்திருக்கை

இன்றைய பூத்தலும்-

வாசம் பரப்புதலாய்

இருந்திருக்க வேண்டும்.

வெள்ளை மலர்-

என்று பெயரிட்டு

மகிழ்கிறீர்கள்.

என் தலைவிதி பற்றி

மறந்து போகிறீர்கள்.

வெள்ளை மாளிகை

முற்றத்து மலராய்

பூத்திருக்கலாம்.

தினமும் சமாதானப்

பத்திரிகையின் மறுபக்கம்

பொஸ்னியாவின் வெடிச்சத்தமும்-

பூப்பதைத் தடுத்துவிடுகிறது.

சிவன் கோவில் வீதி

பூ விற்பவனிடம்,

வந்தடைந்தேன் மாலையில்

சேரலாம் என... அங்கும்,

விதவிதமான பூக்களுடன்

விதவிதமான மண்டையோடுகளும்

விற்பனைக்கு வந்திருந்தன.

தெய்வ சந்நிதியில் பெருமை

பெறலாம் என்று சென்றேன்,

“நீ தெய்வத்திற்கு ஆகாதவள்”

என்று ஒதுக்கி வைத்து

விட்டார் பூசகர்.

சரி... சருகாகும் போதாவது

தமிழ் மணந்து சாவோமே

என்றுதான் இங்கு பூத்தேன்.

“நீ தமிழ்ப் பூ”

என்று சிதைத்து

புதைத்து விட்டார்கள்.

உலகில் எங்கு பூப்பது?

சிந்தனை தொடர்கிறது...

புதை குழியில் இருந்து-

எப்படி நெருப்பாய்த்

துளிர்ப்பது?

சபித்தவர்களை அழித்து

வித்துடலாய் என்று

நான் மலர்வது...?

+++++++++++++++++++

14

மூன்று கவிதைகள்

கடல் அலை எழுந்து

ஆர்ப்பரிக்கும் போது

ஒதுங்கி விடுகிறோம்...

ஒரு பயத்துடன்.

அதுவே-

அமைதிப்பட்டு ஒதுங்கியிருக்கையில்

கல்லெறிந்து

சந்தோஷிக்கின்றோம்...

அதன் அமைதியான

கோபத்தை அறியாமல்...

ழூழூழூ

உன்னிலிருந்து

நிறத்தை

பிரித்து விட்டால்

உன்னில் ஒன்றுமில்லை

ழூழூழூ

பூக்களை மெதுவாக

தொட வேண்டும்

உழைப்பின் வியர்வை

காயமுன்பே

அவனை சந்தோஷப்படுத்த வேண்டும்!

எஜமானனிடம் எதிர்பார்க்கிறாய்

அவனுக்கு-

நீ குனிந்து கதிரறுக்கையில்

மார்புகளை ரசிக்கிறவனிடம்-

சுமக்கவே முடியாமல்

கொழுந்துகளைச் சுமக்கையில்

கொடூரமாய் ரசிப்பவனிடம்-

ஏமாறுவாயானால்

எதிர்வரும் யுகங்களும்

தலைகுனியலாம்.

ஆதலால்...

மறுபடி குனிகையில்

அது கொடூரர்களின்

தலைகளை உருட்ட

அரிவாளை எடுப்பதற்காக

மட்டுமே இருக்கட்டும்!

+++++++++++++++++++++

15

ரயில் பயணம்

ரயில் வண்டிப் பயணம்

பிரியத்திற்குரியது எனக்கு!

அதன் அசைவு... அவள்களை

ஞாபகமூட்ட...

து}க்கம் வரும்... தாலாட்டும்.

வாசிக்கலாம்

அரட்டை அடிக்கலாம்.

எனினும்

து}ங்கும் போதுதான்

பயணமே சுவாரஸ்யமாகி விடுகிறது.

உரசல்கள்...

கீச்சிட்டபடி முத்தங்கள்...

விழிகளின் அழைப்பிதழ்கள்...

விடைபெறும் வலிகள்...

அவசரமாய்...

ஓடி ஏறும் உல்லாசங்கள்...

ரயில் பயணம்

பிரியத்திற்குரியது எனக்கு...

இன்றும்-

கிழவியும் குமரனும்

அல்லது

கிழவனும் குமரியும்

தற்காலிகக் காதலர்களாகிவிட...

மௌனமாய்

வெட்கத்துடன் கண்களை மூடிடுவன்.

இறங்குமிடம் வந்துவிட

பதட்டமாய் விழித்தபடி

எழுந்து இறங்கிடுவன்

பின்னால் எற்றுண்டு

கிடக்கும் விந்துகளை நினைத்தபடி...

++++++++++++++++++++++++

16

இசைக்குள் அடங்காத பாடல்கள்

எந்த-

இசைக்கும்

அடங்காத பாடல்கள்.

*

பனித்துளிகள்

சூரிய கணவனைப் பார்த்தும்

வெட்கத்துடன்-

பூக்களை விட்டு நகரும்.

*

இப்போதும்-

எங்கள் கிராமத்துச்

சூரியன்

இருளுக்குப் பயந்தபடி...

மலைகளுக்குள்

பதுங்கியபடி...

*

துகிலுரிந்து துகிலுரிந்து

களைத்த துச்சாதனனிடம்

எங்கள்; ஊர்

திரௌபதி சென்றாள்

“நானே உரிந்து கொள்கிறேன்”

*

நேற்றைய பொழுதில்

அரும்பான-

பிரகாசின் காதல்

இன்று-

வீதியில் பிணமாய்க் கிடந்தது!

பூசைக்கெனச்

சென்றால்-

கோவிலில் ஐயர்

கைகளைத் தொட்டே

பிரசாதம் தருகின்றார்.

*

ராகங்களை மீட்ட

என-

வீணையை எடுத்தேன்

நரம்புகள்

அறுந்தபடி இருந்தன.

*

பள்ளி சென்ற

கல்யாணி-

தன் காதலைத் தொலைத்துவிட்டு

அழுதபடி

வந்தாள்...

எதிர் வீட்டு மீனா

சோரம் போயும்...

திருமணமாகி

குழந்தைகளுடன்...

*

சைக்கிள் விட

கற்றுத் தந்த மாமா

நான்

வயதுக்கு வந்ததாக

தெரிந்தபின்...

தனக்கு என்னை

அர்ச்சிக்கும்படி...

யாசித்தபடி நின்றார்.

*

என்னை எதிர்பார்த்து

அம்மாவும்-

ஆறுமணிக்குத் திறக்கப்போகும்

கள்ளுக் கடைக்கு

முதல் ஆளாய்ப் போகவென

என்னை

எதிர்பார்த்து நிற்கும்

அப்பாவும்...

எரிச்சல் வரும்...

போய் கடிதம் போடுவதாய்ச்

சொன்ன

சிநேகிதனும்

வராமலே போனான்...

எத்தனை... எத்தனை...

நாட்கள்...

இரவுகளை பகல்களை

கொன்றபடிக்கு...

நம்பிக்கை கூட

இறந்தபடிதான்

துளிர்க்;கிறதோ?

வாழ்ந்து பழகியாயிற்று.

இப்போதெல்லாம்

வாழமுடிகிறது உண்மைதான்...

திருமணம் பற்றி

சிந்திப்பதேயில்லை.

எனி எப்படி...

வாழ்க்கையைக் கூட்டி

ராகம் சேர்ப்பது?

ஏனெனில்

எந்த இசைக்கும்

அடங்காத...

வாழ்வின் பாடல்களல்லவா?

து}சு தட்டி-

எழுந்து செல்வதைத்தவிர...

வேறென்ன செய்யமுடியும்?

20.06.1993

+++++++++++++++++++

17

பிரியத்திற்குரியவளே

பிரியத்துக்குரியவளுக்கு,

வரைகின்ற இம்மடல்

கடைசி என சொல்ல

வேண்டியிருக்கிறது.

சென்ற கடிதமும்

அப்படித்தான்.

இங்கு

எதுவும் வரையறை இல்லை...

காவலரணில்

கண்விழித்தாலும்

கண்ணே

கையெறும்பு கூட நுழைவதைத்

தடுக்க முடியவில்லை.

யார் இருளில் உள்ளனர்

என்பதுதான்

மக்களுக்கும் புரிவதில்லை!

வெளிச்சம்

தருவதாகச் சொன்ன

ஆட்சியாளர்களுக்கும்

பிடிபடவில்லை.

நாம் ஒருவகையில்

விட்டில் பூச்சிகள் தான்.

பிரிகேடியருக்கு

பெண் தேவை என்றால்

தமிழன்

வீட்டில் விடிகாலையில்

அழுகுரல்

எழுந்து

தொடர்கிறது.

ஏன் கண்ணே!

உன்னைப் போல் நானும்

பட்டதாரி ஆசிரியராக

இருந்திருக்கலாம்...

அப்பாவின் கைச்செலவுக்கும்...

அம்மாவின்

வெற்றிலைக்கும்...

உனது உள்ளாடைக்கும்

படிப்பு ஏறாத

இந்த ‘மினுசு’வும்

பலியாக வேண்டியிருக்கிறதே!

இது

நாட்டின் மீதான விசுவாசமா?

இல்லை...

உனக்குத் தெரியுமா?

இலகுவாகக் கிடைக்கின்ற

தொழில் எதுவென்று?

இராணுவச் சிப்பாய் தான்...

கல்வி அவசியமில்லையாம்.

இப்போது ஏன்

வந்தோம் என்றிருக்கிறது.

தந்தையைப் போல

இருக்கிற வயதானவரை,

உன்னைப் போல

இருக்கிற பெண்ணை,

தமிழ் இனத்தின் போராளிகளை,

எத்தனை எத்தனை,

மனித உயிர்களை

அழிக்கின்ற ஏவுகணை

மாதிரியானதில்

வெட்கமாயுள்ளேன்.

தயவு செய்து-

எங்கள் பிள்ளையை

என்னைப் போலாக்காதே!

மறுமடல் எழுதமுடியுமோ

தெரியாது!

ஸ்னைப்பரின் குறியில்...

கண்ணிவெடியில்

எப்படியாயினும்,

உயிர்தரித்தல் சிரமமே!

அவர்களின் கரங்கள்

குறி தப்பாதவைகள்!

ஏகாதிபத்திய அரசியலில்

பலியாகிப் போவது

நம் இனத்து

ஏழைகளும் கூடத்தான்!

எனவே-

எச்சரிக்கையாக இரு...

சொந்த சகோதரனுடனேயே

சண்டையிடு என

சுற்றாடல் சொல்லித் தருகிறது!

போகட்டும்

வரலாறு வெட்கப்படட்டும்!

அன்புடன்,

உன் பிரியந்த.

+++++++++++++++

18

மௌனம் தலைகாக்கும்

விழிகளை மூடிக்கொள்

குருடன் என்றே சொல்

பேசிக் கொண்டது கேட்கவில்லை

நான் செவிடு எனக் கூறு

வழியில்

கற்பழிப்பா? வழிப்பறியா?

உன் பங்களிப்பையும் செலுத்திவிட்டு

நடந்து கொண்டிரு உன்பாட்டிற்கு

எதுவாயினும்

மறுதலித்தல் உன்னிடமிருந்து

வருமெனில் ஆயுதங்களினால்

பிறப்புரிமை அழிக்கப்படலாம்.

மௌனம் உன்

தலை காக்கும் நண்பனே?

02.07.1996

++++++++++++++++

19

துளிர்க்கட்டுமே

நட்சத்திரங்களை

எண்ணி எண்ணியே

இந்த

நாட்களிடம் தோற்றுப்போனவனே

இன்று-

வானம் உன்னிடம்

குசலம் விசாரித்துக் கொண்டிருக்கிறது.

காத்திருந்த ஒரு

மாலைப் பொழுதில்-

பூக்கள் எல்லாம்

நடந்து போயின...

நீ மட்டும்,

பூச்செடியாய்...

தாய்மரத்தின் மறைவில்...

நிலத்தில் எதைத் தேடுகிறாய்?

தொலைத்த உன்

இதயத்தையா?

சுகமாய்ப் போ!

பத்திரமாய் என்னிடமுள்ளது.

கனவில் நீ தந்த

முத்தம்

ஈரமாய்... உலராதபடி...

அத்தனையும் காதல் வெக்கை பார்

காதை எறிகிறாய்,

ஊரில் என் பேச்சை...

இந்த

இலையுதிர் காலத்து மரத்தை

மறுபடி துளிர்க்கவிடு,

போதும்!

++++++++++++++++++++

20

சுதந்திரம் பற்றி

“கைவீசம்மா

கை வீசு

கடைக்குப் போகலாம்” என

பாடமுடிகிறதா?

உன்

காலை நீட்டிப் படு

வேலிக்கப்பாலும்

உனக்கென நிலமுண்டு...

அப்பனின் போதைக்கு

விலையாகிப் போனது

எனினும்-

உனது நிலமென

சொல்லிக் கொள்ள உரிமையுண்டு!

வேகமாய்

வீடு திரும்பும் கோதைக்கு,

மாமி போட்ட விலங்கு

உடைக்க

தைரியம் வரவில்லை!

உனக்குப்

பிடித்த பாடலை

உரத்து படிக்க,

வானொலியில்

கேட்க முடியாதபடி...

உனது

சுதந்திரம் பறிபோனதுபற்றி

அவலப்படுகிறாய்; தெரிகிறது.

நடு சாமத்துக் குளிரில்

மார்பில்-

கைபோடும் மனைவிக்கு

சந்தோசம் தர முடியாதபடி

ஷெல்

விழுந்து தொல்லை தரும்.

உன்

ஆழ்மனத்தின் உண்மைகளை

உளறவாவது

முடிகிறது என்று சொன்னால்

பாக்கியசாலிதான்! மன்னித்துவிடு.

என்னால் முடியவில்i.

இதுவரை

வெளிச்சம் உதிரவில்லை.

வாழ்க்கை துருப்பிடித்த

எழுத்தாகி நாட்களாயிற்று.

நாம் இன்னமும் இருளில் தான்.

பிறகு சொல்...

நீ சொல்லும்

சுதந்திரம் பற்றிய சேதியை

கேட்டுக்கொள்கிறேன்.

28.11.1993

++++++++++++++++

21

மைதானம்

நினைவுகள்

தெரிந்த நாட்களில்

இருந்து-

இந்த மண்ணின் புழுதிதான்

எனது

விளையாட்டு மைதானம்.

அம்மாவின்

முணுமுணுப்புகளும்

அப்பாவின்

கட்டுப்பாடுகளும்...

என்னை மீறி

சுதந்திரமாய்

அனுமதித்த அந்த

மைதானம்...

பாட்டன் தந்தது.

அங்கே தான்

எனது பிள்ளை...

விளையாட

அனுமதி மறுக்கப்பட்டது.

காற்றுக்கும் சுவாசம்

மறுக்கப்பட்ட

ஒரு நாட்டில் தான்

மைதானம் கூட

கைது செய்யப்பட்டவனைப் போல

மகனைப்

பார்த்தது மைதானம்

மாலை விழவேண்டுமே

என்பதற்காக

கழுத்தை வளர்த்தவர்களும்;

தமக்கே என

உருவாக்கப்பட்ட

பாராளுமன்ற கதிரைகளும்

சுகத்தைத்தர...

அவர்களால் தான்

மறுக்கப்பட்டது

என் பாட்டன் தந்த

அந்த மைதானம்.

“எப்போ விளையாடலாம்”

மகன் கேட்ட போது-

கிழக்கும்

இருட்டியே இருந்தது.

மைதானம் மட்டும்

வெறுமையாய்

சுடுகாடென...

04.09.1992

++++++++++++++++++++

22

என் இனிய தேவதையே!

விழுது என நீ

தோள் தரும் வரை

வேர்களும் பிரிந்தே இருந்தன.

நிறங்களே இல்லை

முகங்கள் எதற்கு?

நீரில்

நிலவில்

உன் முகம் தெரிந்தபின்

தவறு

என்ற கருத்து முட்டியது

உண்மைதான்!

பனிக்காற்றாய்

வந்து அமர்ந்தாய்...

இதயத்தின் வலியை

சொல்ல

தமிழில் வார்த்தைகள் இல்லையே!

நிலவு மீது நான் வைத்த

நம்பிக்கை நிரந்தரமில்லை

என்றிருந்தேன்...

நீ நெருங்கி வரும் வரை...!

என் சுவாசம் இழப்பினும்

உன் பெயரின்

உச்சரிப்பு

நிகழும்...

தொடரும்.

முகில் கூடத் துணை இல்லை.

வானம்

தனித்து விடப்பட்டிருந்தது.

எனினும்-

உன் வரவுடன்

வானம் பூமியுடன்

கை குலுக்கிக் கொண்டது.

சூரியன் சற்று ஒதுங்கினாலும்

பகல்தான்.

வானம் இன்னமும் இருளில் தான்.

என் வழியில் மட்டும் நிலவு...

வாழ்க்கை முட்கள் நிறைந்தன.

ரோஜாமாடம் நிரந்தரமானது.

மழையென நீ வந்தபின் தான்

மண்வாசமும் இதயத்தில்

பரவி நின்றது காலாகாலத்திற்கு...

என் வாழ்வில் து}க்கம்

தொலைந்த இரவுகளே அதிகம்...

உன் சந்திப்பு நிகழும் வரை...!

எனி...

கண்கள் கண்ட கனவுகள்

வாழட்டுமே.

என் சுவாசத்திற்கு உயிர் கொடு

என் இனிய தேவதையே!

20.03.1998

+++++++++++++++++++++++

23

நான் வளர்த்த பூனை

அதற்கும்

தாயின் அரவணைப்பு தேவைப்படுகிறது

என் குழந்தையைப்போல...

என் அதட்டலைப் பெரிதுபடுத்துவதேயில்லை.

மெதுவாக

எழுந்து அசைந்து து}ரமாய் போய்

நின்றபடி...

வாலை மேல் உயர்த்தி...

நான்கு கால்களையும் விறைக்கப்பண்ணி...

மீசை கூடச் சிலிர்க்கும்...

சோம்பல் முறிக்கிறதாம்.

பிறகு

உடலைச் சிலிர்த்துக் கொள்ளும்...

அதன் அழகை ரசிக்கின்ற காட்சியை

சிதைத்தபடி

அம்மாவின் குரல் ஒலிக்கும்.

“சனியனே! பூனைப் பிறப்பா நீ...

எழுந்து வந்து சமையடி...”

கனவு கலையும்... அழகு பற்றிய

ஏக்கம் தொடரும்...

பின்னாளில் வாகனத்தில்

மிதிபட்டு... குடல் பிதுங்கி

குருதி வெள்ளத்தில் கிடந்தபோது...

நான் அழுத அழுகை...

இன்னமும் இந்த சுவரில்

ஒலிக்கவே செய்கிறது.

08.06.1995

++++++++++++++++++

24

காதலி

நெஞ்சில் நீ

நிலைத்திட்ட பிறகு

நீலவானம்

கதைத்தாலென்ன?

என்

மாசிகையே

மாதம்

தவறியதென்ன?

நிலவு சிரித்த

ஒரு

பொழுதில் தான்

உன்

சூடான பதில்

வந்தது.

திரும்பிய பக்கமெல்லாம்

காற்றும்

சூடாய் வீசியது...

தனிமை

உனக்கும் கொடுமைதான்.

+++++++++++++++++++++

25

தீக்குளிப்பு

வாழ்வைப்

பங்கு போடவே

காதல்

தேவைப்பட்டது...

இன்று...

காதலை

யார் தான்

புனிதப்படுத்துகிறார்கள்...

எல்லாமே

இங்கு வியாபாரமாயிற்று...

இவனின்

வாழ்க்கைவீடு

தோல்விகளின்

அத்திரவாரத்தால்

கட்டப்பட்டுள்ளது!

எதுவரை

வானம் வெளிக்கும்

என்று

காத்திருப்பது?

சுவாசிக்க

யாரும்

கற்றுக் கொடுக்க

வேண்டியதில்லை!

முதலில்

கணவனின்

அன்பைப் பெற வேண்டும்

அது

ஒரு

தாஜ்மஹாலை உருவாக்க

வழிவகுக்கும்.

கிளியோபாத்திராவின்

காதல்

கொச்சைப்படுத்தப்பட்டது...

சாம்ராஜ்யங்கள்

இழப்பதற்கு

உவமைகளாயிற்று.

பாடத்தெரியுமா?

சமையல் தெரியுமா?

என்று

யாரும் கேட்பதில்லை

காலமாற்றம் தான்.

ஆனாலும்-

இராமனின் வாசமே

சீதையின் சொர்க்கம்

சுவாசம் கூட.

மண்ணின்

ஒத்துழைப்பு

குயவனுக்கு வாழ்க்கை.

இங்கே-

மண்ணின் நிராகரிப்பு

இவனின்

வாழ்வு அங்கீகரிக்கப்படாமல்

உள்ளது.

இராமனைத்

தீக்குளிக்கச் சொல்லும்வரை...

இராமன்-

தயாராய் இல்லைத்தான்

எரிகின்ற நெருப்பு

தீயவைகளை

மட்டுமே

எரிக்கட்டும்.

++++++++++++++++++++

26

உயிர் கொத்திப்பறவை

கிளைகள் வேர்களுடன் முத்தமிடும்,

மெல்லியதாய்-

காற்று வந்து தன் சபலம் பற்றி

கொடியின் காதுக்குள் கிசுகிசுக்கும்.

பூவாத பூக்களும் பூப்படையலாம்

கிராமத்து மழைபட்டு...

“தமிழ் மணந்து சாகவேண்டும்!”

அப்பா திருவாசகத்துக்குள் செல்வாவை,

பாரதிதாசனைத் தேடுவார்.

அம்மா,

பகவத்கீதையில் நிகழ்காலத்தைப்

படிப்பாள்.

தேன் வந்து பாயுது காதினிலே என்பது மருவி

அவர்கள் அடியில்

எம் காதில் “ரெயில்” ஓடும் என தம்பி பாடுவான்.

அழுத நேரமும் உண்டு!

நான் சிரித்த காலமுமுண்டு!!

இன்று-

உயிர் கொத்திப் பறவை

எச்சமிட...

உயிர் அறுகின்ற சத்தம்

ஓலமாய்...

கோயில், அகதி முகாம் எனினும்

விதி ஒன்றுதான்.

மரணம்-

எங்கும் நிகழலாம்!

எதிலும் நடைபெறலாம்!!

மனித மரங்கள் அவசரமாய் ஓடும்.

குந்தி எழுந்த மண்ணைத் தட்ட

யாரும் தயார் இல்லை.

து}ங்கி எழுந்த பாயும்

சுருட்டாத பொழுதாய்...

பிணம் நாறும்...

ஷெல்பட்டு உடல் சிதறும்...

வலதுகை வாழைப்பாத்திக்குள்...

சுட்டுவிரலால் ஆணையிட்ட கரம்

இறங்கியதாய் தோளுக்குக் கவலை.

புதுச் சப்பாத்தின் பெருமை நீடிக்கவில்லை.

இடதுபுறச் சுவருடன் மோதிக்கிடந்தது

அனாதையாய்...

இந்நாளில் எது வேண்டும் சொல்?

என் கவலை எல்லாம் எது தெரியுமா?

வாழ்ந்து கொள்ளவில்லையே என்பதில் அல்ல...

வீழ்ந்த கரத்தால்

காதலியைத் தொட்டிருக்கலாம் என்பதாய் அல்ல...

திமிர் கொண்ட அவர்களை

உதைக்காமல் தொலைத்த காலங்களை எண்ணி அல்ல...

அவலங்க@டே

தனித்துக் கிடக்கும் கையிலிருந்தும்,

மோதி இழந்த காலிலிருந்தும்...

மணிக்கூடும், மோதிரமும், சப்பாத்தும்,

இன்னும் பொறுக்க வரும்

திருடர்களை நினைக்க நினைக்க...

வானம் விரியும் நெருப்பாய்...

எமது அவலம் அதைவிட பெருநெருப்பாய்...

சுதந்திர இருப்பு நிலைக்காதவரை

உயிர்க்கொத்திப் பறவைகளின்

கொடுமையும் தொடரும்...!

+++++++++++++++++++

27

நேசத்தின் வேர்கள்

கடல் நீரை சிறுசெம்பில்

அடைப்பேன் என்கிறாய்...

மரங்களும்

தலை அசைத்து ஆமோதிக்கின்றன.

ஒற்றைக்காலில்

தன் காதலுக்காய்

கொக்கும் தவமிருக்கும்...

காலங்... காலமாய்...

சிறு தும்பி கூட

என் கரம்பட்டு சாகடிக்கப்படவில்லை.

வண்ணத்துப் பூச்சிகளின்

சிறகசைப்புக்கும் ராகமுண்டு...

ரசிப்பேன்...

காலம் கிளை முறித்தது.

‘இன்று அவளை கொன்றே வருக’

என்று-

ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது...

ஓட்டுக்குள் முடங்கிக் கிடந்த

ஆமைக்கும்

துப்பாக்கி தரப்பட்டுள்ளது...

நேசத்தின் வேர்கள் காயம்பட்டது.

வானம்

பொடிபடாமல் என்ன

செய்யும் சொல்?

+++++++++++++++++++++

28

என் பிரிய அப்பாவே!

அப்பா!

நீ

இப்போதெல்லாம்

திண்ணைப் பேச்சுக்குப்

போவதேயில்லை...

மௌனமாகி

மிக

நீண்ட நாட்கள்தானாயிற்று!

சொல்லாமல் ஓடிப்போன

அண்ணனிலிருந்து,

தன் கற்பிழந்து வந்து

நின்ற

தங்கை வரை...

இடையே...

வாழாவெட்டியாகிவிட்ட

அக்காள் உட்பட,

மௌனமாகி

நீ மிக

நீண்ட நாட்கள்தானாயிற்று...

உனக்குப் பிடித்த

கட்சி அரசியல்

பிடிக்கவில்லை என்பது,

உனது-

மௌனத்திலிருந்து புரிகிறது.

அதற்காக...

போராளியாகிவிட்ட

என் மீது

கோபமா? ப்ரியமா?

மௌனம் உடைத்து சொல்

உன் கட்சி அரசியல்

கதிரைகளை நம்பியது

நாங்கள்

துப்பாக்கிகளை நம்புகிறோம்.

புரிகிறதா?

சுவரில்-

படமாய்-

மாலையுடன்

ஒதுங்கி நின்ற போதும்...

எழுந்துவந்து-

என்னை

ஆசீர்வதி...

என் ப்ரிய அப்பாவே.

25.11.1993

+++++++++++++++++++++